Saturday, August 20, 2011

லாவ் மற்றும் லிட்ரோ (Gas) கேஸின் விலை 156 ரூபாவினால் அதிகரிப்பு

உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று நள்ளிரவு முதல் லாவ் மற்றும் லிட்ரோ கேஸின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதன்படி 12.5 கிலோகிராம் எடையுள்ள லாவ் மற்றும் லிட்ரோ காஸ் விலை 156 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் மீது அடையாளம் தெரியாதோர் தாக்குல்! அம்பாறையில் சம்பவம்!

அம்பாறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொண்டை வெட்டுவான் பிரதேசத்தில் வயலில் யானைக் காவலில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மீது ஜீப்பில் வந்த இனம் தெரியாத குழுவினர் மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த மூவர் ஆபத்தான நிலையில் அம்பாறை பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் கொண்டை வெட்டுவான் பள்ளிவாசலுக்கு அருகாமையில் நடைபெற்றுள்ளது.

இத்தாக்குதலில் காயமடைந்த சம்மாந்துறையைச் சேர்ந்த ஏ.எம்.மன்சூர் (வயது45) ஏ.எம்.முகைதீன் பாவா(வயது 44), நிந்தவூரைச்சேர்ந்த எம்.சலீம்(வயது 50) ஆகிய மூவருமே மேற்படி சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளானவர்களாவர்.

இச்சம்பவம் பற்றி தாக்குதலுக்குள்ளானவர்கள் தெரிவிக்கையில் தாம்வயலில் யானைக்காவலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அங்கு ஜீப் வண்டியில் ஒரு குழுவந்து தம்மிடம் நீங்கள் எந்த மதத்தைச்சேர்ந்தவர்கள் என்று கேட்டதாகவும், தாம் இஸ்லாமியர்கள் எனக் கூறியபோது எம்மீது சரமாரியாகத் தாக்கி விட்டுத் தப்பிச் சென்று விட்டதாகவும் கூறினார். இது தொடர்பாக அம்பாறை பொலிஸார் விசாரணைகளை நடத்திவருகின்றனர்.


கிழக்கில் மர்ம மனிதன் விவகாரத்தால் கூலித் தொழிலாளர் பெரிதும் பாதிப்பு

கிழக்கு மாகாணத்தில் மர்ம மனிதன் விவகாரம் காரணமாக சிவில் நிர்வாகம் முற்றாக முடங்கும் நிலைமையேற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக இந்தச் சம்பவங்கள் காரணமாக மிகவும் பின்தங்கிய பிரதேச மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலுவலகங்களுக்குச் செல்லும் பெண் ஊழியர்களின் வருகை மிகவும் குறைவடைந்த நிலையிலுள்ளதாகவும் இதன் காரணமாக தமது அன்றாட நடவடிக்கைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அத்துடன் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகள் காரணமாக கிராமங்களில் சிறுசிறு கொள்ளைச் சம்பவங்களும் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மர்ம மனிதனைப் பயன்படுத்தும் சிலர் வீடுகளில் பாய்ந்து திருட்டுகளில் ஈடுபட்டு வருவதுடன், இது தொடர்பில் பொதுமக்கள் பொலிஸ் நிலையங்களுக்குச் சென்று முறையிடுவதற்கும் பயப்படும் நிலையிலும் உள்ளனர்.
யுத்த காலத்தை விட மிக மோசமான நிலையே இன்று ஏற்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் மக்கள் மாலை 5 மணிக்குப் பின்னர் வீதிகளிலிறங்க பயப்படும் நிலையே காணப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தின் போது மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட படுவான்கரை பிரதேச மக்கள் தமது அன்றாட பணிகளை செய்ய முடியாத நிலைமையை மர்ம மனிதன் விவகாரம் ஏற்படுத்தியுள்ளது.
தினமும் மக்கள் பயத்தில் உறைந்து நாட்களை கடத்தி வருகையில், கூலித் தொழிலுக்குச் சென்று தமது குடும்பங்களை வழிநடத்தியவர்கள் கடந்த ஒருவாரமாக எதுவிதத் தொழிலுக்கும் செல்ல முடியாத நிலையில் மிகவும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
மர்ம மனிதன் விவகாரம் காரணமாக மட்டக்களப்பு தொடக்கம் பொத்துவில் வரையிலான அதிவேக நெடுஞ்சாலைகளில் விபத்துகள் அதிகரிக்கும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.
தற்போதைய நிலைமை காரணமாக பொலிஸாரின் மோட்டார் வாகனப் போக்குவரத்துப் பிரிவு முற்றாக செயலிழந்துள்ளது. பொலிஸார் மீது மக்கள் தாக்குதல்கள் நடத்துவதன் காரணமாக வீதி பாதுகாப்புக் கடமைகளில் பொலிஸார் ஈடுபடுவது நிறுத்தப்பட்டுள்ளது.
பயணங்களை மேற்கொள்ளும் பொதுமக்கள் வாகனங்களின் அதிக வேகம் காரணமாக பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

காத்தான்குடியில் பொலிஸார் - பொதுமக்கள் மோதலால் பதற்றம்! வீடுகள், வாகனங்கள் சேதம்

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனைக் கிராமத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட மர்ம மனிதன் தொடர்பாக பதற்றத்தினால் பொலிஸாருக்கும் பொதுமக்கள் சிலருக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பாலமுனை மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் அமைதியின்மை ஏற்பட்டது.
இதன்போது நடந்த தாக்குதல்களில் சில வாகனங்கள், வீடுகளின் கதவுகள், ஹோட்டல்களின் முன்புற கண்ணாடிகள் என்பனவும் சேதமடைந்தன.

காத்தான்குடியை அண்மித்த பாலமுனை கிராமத்தில் நேற்றிரவு மர்ம மனிதர்கள் இருவரின் நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்ததையடுத்து அப்பகுதியில் பதற்ற நிலை காணப்பட்டது.

இதையடுத்து நேற்றிரவு 11 மணியளவில் பாமுனை மற்றும் கர்பலா பிரதேசங்களில் பொலிஸார் குவிக்கப்பட்டனர்.

பொலிஸாருக்கும் பொதுமக்கள் சிலருக்குமிடையில் முரண்பாடு அதிகரித்த நிலையில், பொலிஸாரை நோக்கி பொதுமக்கள் சிலர் கற்களை வீசினர். இதன் பின்னர் அங்கு வரவழைக்கப்பட்ட இரானுவத்தினர் சப்த வேட்டுக்களை தீர்த்து பொதுமக்களை கலைத்தனர்.

இதன் போது காத்தான்குடி கடற்கரை வீதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறி மற்றும் மற்றும் வான், அதே போன்று புதிய காத்தான்குடி கர்பலாவீதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் என்பவற்றின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் சில ஹோட்டல் கடைகளின் முன்பகுதி கண்ணாடிகளும் உடைக்கப்பட்டுள்ளன.

இதே போன்று சில வீடுகளிற்குள் இருந்த மின் குமிழ்கள் வீட்டின் கதவுகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இச்சம்பவத்தின் போது அங்கு விரைந்த காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஷ்பர் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட் ஆகியோர் இராணுவ, பொலிஸ் உயரதிகாரிகளுடன் பேசி நிலைமையை வழமைக்கு கொண்டு வந்தனர்.

பின்னர் இன்று அதிகாலையில் காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள குட்வின் சந்தியில் டயர்கள் போட்டு எரிக்கப்பட்டன.

இதையடுத்து அங்கு விரைந்த காத்தான்குடி நகர சபை தலைவர் அஷ்பர் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் உள்ளிட்ட பொதுமக்கள் சில் எரிந்து கொண்டிருந்த டயர்களை அகற்றி வாகனப்போக்குவரத்தை சீர் செய்தனர்.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.